Accused with police pt desk
தமிழ்நாடு

சென்னை: ஏடிஎம் மையங்களில் விட்டுச் செல்லும் Wifi கார்டுகளை குறிவைத்து நூதன மோசடி!

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வேந்தன். இவர், கடந்த மார்ச் 31ஆம் தேதி தன்னுடைய வங்கி டெபிட் கார்டு தொலைந்து விட்டதாகவும், தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து 3 தவணைகளாக ரூ.12,000 எடுக்கப்பட்டுள்ளதாகவும் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, ஏடிஎம் கார்டுகள் தொலைக்கப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சி பதிவுகள் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தீவிர நோட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் வங்கி அருகே நேற்று காலை நீண்ட நேரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், பழைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், ஏடிஎம் மையங்களில் இருந்து ஏடிஎம் கார்டுகளை எடுத்துச் செல்லும் நபர் இவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த தல்லா ஸ்ரீனிவாசலு ரெட்டி (27) என்பது தெரியவந்தது.

தல்லா ஸ்ரீனிவாசலு ரெட்டி

பொறியியல் பட்டதாரியான தல்லா ஸ்ரீனிவாசலு ரெட்டி, ஆந்திராவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டேட்டா ஆப்ரேட்டராக ஒரு வருடம் பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு பணியாற்றிய போது, டெபிட் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? எப்படி பணம் எடுக்க முடியும்? என்ற நுணுக்கங்களை கற்றுக் கொண்டு, பின் வங்கி வேலையை விட்டுவிட்டு ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் தவறவிடும் கார்டுகளை எடுத்து அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

வைஃபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து திருடும் தல்லா ஸ்ரீனிவாசலு ரெட்டி அதனை ஸ்வைப் மெஷின் இல்லாமல் டேப் செய்து பணத்தை திருடி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இதே போல ஏடிஎம்-மில் தவறவிடப்படும் வைஃபை கார்டுகளை மட்டும் திருடி அதன் மூலம் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். இவர், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக ஆன்லைன் ரம்மிக்கு பணத்தை அனுப்பி அதன் மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Arrested

இவர் மீது ஹைதராபாத்தில் மட்டுமே ஏடிஎம் கார்டுகளை திருடியதாக 11 வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 63 வைஃபை ஏடிஎம் கார்டுகள், லேப்டாப், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த குற்ற சம்பவத்தில் உடந்தையாக உள்ள இவரது இரண்டு நண்பர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.