சென்னை சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட மீன் மார்க்கெட்களில், மீன்களை பதப்படுத்த ஃபார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் மீன்களில் ஃபார்மலின் ரசாயனம் கலந்துள்ளதா என சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஆய்வு நடத்தினர்.
மேலும் மீன் எப்போது பிடிக்கப்படுகிறது, எத்தனை நாட்கள் பதப்படுத்தப்படுகிறது, ரசாயனம் ஏதும் கலக்கப்படுகிறதா? என விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் சேகரித்த மீன் மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 3 முதல் 4 நாட்களில் ஆய்வு முடிவுகள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன் மார்க்கெட்களிலும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்றைய பொழுது சிந்தாரிப்பேட்டை பகுதியில் இதேபோன்று அதிரடி சோதனையை அதிகாரிகள் நடத்தினர். இதில் சுமார் 30 மீன்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 11 மீன்கள் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்டிருந்தது உறுதியானதாக கூறப்படுகிறது. மீன்களை ரசாயனம் தெளித்து பதப்படுத்தி, விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபார்மலின் ரசாயனம் மூலம் புற்றுநோய் பரவும் என்பதால், மீன்களை வாங்க மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.