சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷா ஆகியோர், பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காவலாளி ரகு, தனது உறவினர் ஒருவர் இறந்ததாகக் கூறி விழுப்புரம் சென்றுள்ளார். பூங்காவில் சோனியாவும், அவரது மகள் சுதக் ஷாவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் பூங்காவிற்குச் சென்றுள்ளார். அப்போது பூங்காவில் விளையாடி கொண்டு இருந்த காவலாளியின் மகள் சுதக் ஷாவை இரண்டு நாய்களும் கடித்ததுக் குதறியுள்ளன. இதை பார்த்த நாயின் உரிமையாளர் அமைதியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகழேந்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் குழந்தையின் தந்தையான ரகு செய்தியாளர்களிடையே பேசிய பொழுது, “எனது சொந்த ஊர் விழுப்புரம், பிழைப்பிற்காக இங்கு வந்தேன். என் குழந்தையின் நிலைமை என்னவென்று எனக்கே தெரியவில்லை. சீரியஸ் கண்டிஷனில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். என் குழந்தையைப் பார்ப்பதற்கு என்னை இன்னும் அனுமதிக்கவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.
இந்நிலையில் குழந்தையின் மருத்துவச்செலவை நாயின் உரிமையாளர் புகழேந்தி ஏற்றுக்கொண்ட நிலையில், குழந்தையானது, தற்பொழுது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் இன நாய்களை புகழேந்தி வைத்திருந்ததாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இவ்விவகாரம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறுகையில், “சென்னையில் நாய் கடித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் வளர்ப்பதற்கு அந்த உரிமையாளரிடம் முறையான நாய் உரிமம் (லைசென்ஸ்) இல்லை. 23 வகை நாய்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. அதில் ஒரு வகைதான் இந்த ராட்வீலர்.
ஆனால் மத்திய அரசின் அந்த உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே இதில் உள்ள சட்ட சிக்கல்களை பார்த்துவிட்டு கால்நடை மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே முடிவு செய்யப்படும். இதை ஏன் இவர் வளர்த்தார் என்பது குறித்து கால்நடை துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விலங்குகள் நல வாரியம் சார்பில் கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. இவ்வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என தடை உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் சென்று கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து முறையிட உள்ளோம். தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் நாய் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான விளக்கத்தை பெறுவோம். இதுகுறித்து கலந்தாலோசித்து நீதிமன்றத்தில் முறையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படும்.
வீட்டில் வளர்ப்பு நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் முறையாக லைசன்ஸ் கட்டாயம் பெற வேண்டும். நாய்களுக்கு அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். சிறுமியை கடித்த நாயை பிடிப்பதற்கு இப்போது வாய்ப்பில்லை. வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பவர்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கப்படும்” என்றார்.