சென்னை பள்ளிக்கரணை அருகே பெரும்பாக்கத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் 10 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
அக்டோபர் 14-ஆம் தேதி, சென்னை பள்ளிக்கரணை அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து ஸ்ரீபன், ஆனந்த் உள்பட 3 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் ஸ்ரீபனையும் ஆனந்தையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். ஸ்ரீபன் மற்றும் ஆனந்துடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த மூன்றாவது நபரும் அச்சத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்.
ஸ்ரீபனும், ஆனந்தும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியது பள்ளிக்கரணை காவல்துறை. ஸ்ரீபன் மற்றும் ஆனந்த் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை, முன்விரோதமும் கிடையாது. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட சந்தேகத்தின் பேரில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பெரும்பாக்கத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. எனினும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. 10 நாட்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.