தமிழ்நாடு

தந்தை மரணம், தாய் கொலை - சிறுவனை மகனாக தத்தெடுத்த போலீஸ்

தந்தை மரணம், தாய் கொலை - சிறுவனை மகனாக தத்தெடுத்த போலீஸ்

webteam

தாய், தந்தை இறந்தவிட்ட நிலையில் இருந்த சிறுவனை, காவல் உதவி ஆணையர் பாலமுருகன் தத்தெடுத்துள்ளார்.

சென்னை அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த தம்பதி கோவிந்தராஜன், பரிமளா (33). இவர்களுக்கு கார்த்திக் என்ற ஒரு மகன். கோவிந்தராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். கார்த்திக் விடுதியில் தங்கி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோவிந்தராஜன் மறைவிற்குப்பிறகு இந்த குடும்பத்திற்கு உறவினர்கள் என யாரும் இல்லை. இந்த சூழலில் தான் கார்த்திக் தாயை பக்கத்துவீட்டை சேர்ந்த இளைஞர் சூர்யா (18) கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். கொலைக்கு முன்விரோதமே காரணம் எனக்கூறப்படுகிறது. விடுதியில் இருந்த கார்த்திக்கு தனது தாய் இறந்தது தெரியாது. அவரை விசாரித்த காவல்துறையினர், விஷயத்தைக் கூறாமல் காவல்நிலையம் அழைத்துச்சென்றுவிட்டனர். 

கொலை நடந்த சரகம் காவல் உதவிய ஆணையர் பாலமுருகனின் கட்டுப்பாட்டில் வருவதால், அவர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் காவல்நிலையம் சென்று காவல்துறையினரை கேட்டபோது, இறந்த பெண்ணுக்கு மகன் ஒருவர் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளனர். அவரிடம் தாய் இறந்ததை பாலமுருகன் தான் முதலில் கூறியுள்ளார். அதைக்கேட்ட கார்த்திக் இனி தனக்கு யாருமே இல்லை என்ற எண்ணம் தோன்ற, கண் கலங்கிய நிலையில் உறைந்துபோய் உட்கார்ந்துள்ளார். அவரது கண்ணில் இருந்து சோகம் அங்கிருந்த காவலர்களை கலங்கச்செய்துள்ளது. கார்த்திக்கிற்கு ஆறுதல் கூறிவிட்டு பாலமுருகன் வீடுசென்றுவிட்டார்.

ஆனால் கார்த்தியின் ஞாபகம் அவரை தூங்கவிடவில்லை. ஆதரவற்ற கார்த்தியை தனது மகனாக தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளார். இதனை தனது மனைவியிடம் கூறியுள்ளார். அவரும் ஏற்கனவே 2 குழந்தைகள் நிலையில், கார்த்தி மூன்றாவது குழந்தையாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து விடுதிக்கு சென்ற பாலமுருகன் அங்கே எழுதிக்கொடுத்துவிட்டு, கார்த்திக்கை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தனது மகன் உடைகளை அச்சிறுவனுக்கு வழங்கியுள்ளார். அந்த சிறுவனை தனது மகனாக மனதளவிலும் ஏற்றுக்கொண்டுவிட்டார். இதைத்தொடர்ந்து விரைவில் முறைப்படி கார்த்திக்கை தத்தெடுக்கவுள்ளார். பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.