தமிழ்நாடு

திருடியே “சூப்பர் மார்க்கெட்” வைத்த பலே திருடன் - பொறி வைத்து பிடித்த போலீஸ்

திருடியே “சூப்பர் மார்க்கெட்” வைத்த பலே திருடன் - பொறி வைத்து பிடித்த போலீஸ்

webteam

சென்னை காவல்துறையினருக்கு கடும் சவாலாக திகழ்ந்த பல ஆண்டுத் திருடன் சிக்கினான்.

சென்னை கொளத்தூர், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சையத் சர்பராஸ் நவாஸ். 2வது மட்டுமே படித்த இவர், சிறுவயது முதலே திருடும் பழக்கம் உடையவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். அதன் காரணமாக சிறுவயதிலேயே பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். வயது வளரவளர திருட்டின் அளவும் வளர்ந்துள்ளது. 2வது மட்டுமே படித்திருந்தாலும், திருடுவதில் பெரிய ஜாம்பவானாக இருந்துள்ளார் இந்தத் திருடன். திருட்டு வழக்குகளில் மட்டும் 7 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆண்டுகள் சில செல்ல, மற்ற திருடர்களைப் போல இல்லமால் தனது திருட்டிற்கு ஒரு தனி பாணியை ஏற்படுத்தியுள்ளார் சையத். திருடுவதற்கு இவர் போட்ட  திட்டங்களை விட, திருட்டில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கு இவர் போட்ட திட்டங்களே அதிகம். 

பெரிய அளவில் திருடத்தொடங்கிய ஆரம்பக்காலத்தில், முதலில் 3 கார்களை திருடியுள்ளார். அந்த கார்களுடன் சேர்த்து பல கார்களின் நம்பர் ப்ளேட்டுகளை மட்டும் திருடியுள்ளார். ஏனெனில் ஒரு நாளைக்கு ஒரு நம்பர் ப்ளேட் எனப் பொருத்திக்கொண்டு சுற்றுவதற்காக. அந்த கார்களை மூலமாக வைத்தே தனது அனைத்து திருட்டுகளையும் அரங்கேற்றியுள்ளார். இவருக்கு கூட்டாளிகளாக கொளத்துரை சேர்ந்த முகமது செரின் மற்றும் கொரட்டூரைச் சேர்ந்த ராஜா ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் ஒரு கடையில் திருடுவதற்கு முன்பு, பகல் நேரங்களில் பலமுறை அந்தக் கடையை நோட்டமிடுவார்களாம். பின்னர் இரவில் அந்தக் கடையின் வாசலை ஒட்டி காரை நிறுத்திவிட்டு, கடைக்குள் புகுந்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். விடிவதற்குள் கடையை சுத்தமாக காலி செய்துவிட்டு வெளியேறுவது இவர்கள் திருட்டின் தனிப்பாணி. அதேபோன்று திருடுவதற்கு கடைக்குள் சென்று பொருட்களை எடுப்பது எல்லாம் முக்கிய குற்றவாளியான சையத் தான். இவர் திருடுவதற்கு முன்னர் கையுறைகளை மாட்டிக்கொள்வாராம். கடைக்குள் சென்றதும் முதலில் கழட்டுவது சிசிடிவி கேமராவையும், அதன் காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்கையும்தான். பின்னர் தான் மற்ற பொருட்களை திருடுவார்களாம். 

இதே பாணியில் செல்போன் கடை, நகைக்கடை, துணிக்கடை, வாட்ச் கடை உட்பட பல கடைகளில் கைவரியை காட்டியுள்ளனர் இந்தத் திருட்டுக்கும்பல். ஆனால் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தடயங்கள் இன்றி குழம்பியுள்ளனர். இவ்வாறு திருடிய பணத்தைக் கொண்டு 3 வருடத்திற்கு முன்னர் அரக்கோணத்தில் சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றையே சையத் தொடங்கியுள்ளார். பின்னர் காவல்துறையினரின் பார்வையில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் அந்தக் கடையை எடுத்துவிட்டார். இருப்பினும் தான் திருடிய பொருட்கள் அனைத்தையும், தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பரிசாக அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது மச்சானுக்கு வாட்ச் கடை வைத்துக்கொடுப்பதற்காக கோவையில் உள்ள வாட்ச் கடை ஒன்றில் திருடியுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட 820 வாட்ச்களை தனது மச்சானிடம் வழங்குவதற்கு காத்திருந்த நிலையில் தான், சையத்தை காவல்துறையினர் பிடித்துள்ளனர். 

சமீபத்தில் ராயப்பேட்டையில் உள்ள ஒரு செல்போன் கடையில் சையத் மற்றும் அவரது நண்பர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த ராயப்பேட்டை காவல்துறையினர், கைரேகை இல்லாமல் இருப்பது மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதன் அடிப்படையில் விசாரிக்க தொடங்கினர். இதே பாணியில் சென்னை நடைபெற்ற திருட்டுக்களின் வழக்குகளை புரட்டத்தொடங்கினர். அதில் இதேபாணியில் நடைபெற்ற திருட்டுக்கள் தொடர்பாக மட்டும் சுமார் 18 காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. விவகாரத்தின் ஆழத்தை அறிந்த காவல்துறை திருட்டுக்கும்பலை உதவி ஆணையர் வினோத் சாந்தராம் தலைமையிலான தனிப்படையை அமைத்துள்ளது. தீவிர விசாரணையை தொடங்கிய தனிப்படை, திருட்டு நடைபெற்ற பகுதிகளின் உள்ள பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராயத்தொடங்கினர். 

அதில் அதிகமாக ஒரு கறுப்பு நிற கார் ஒன்று சுற்றித்திரிவது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த கார் ஒவ்வொரு முறையும் ஒரு நம்பர் ப்ளேட்டுடன் இருந்ததால், காவல்துறையினர் குழம்பியுள்ளனர். பின்னர் இறுதியாக ராயப்பேட்டையில் நடைபெற்ற திருட்டின் போதும், அதே பகுதியில் அந்த கார் சுற்றுத்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கார் பெரும்பாலும் வரும் பகுதியை உணர்ந்த காவல்துறையினர் பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே கறுப்பு கார் வர அதை உடனே தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் காரில் வந்த சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் காவல்துறையினரை இடித்துவிட்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினர் கல்லால் கண்ணாடியை உடைத்து, அவர்களை மடக்கிப்பிடித்துள்ளனர். அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தான் இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்துள்ளது. தற்போது மூன்று பேரையும், நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், கைக்கடிகாரங்கள், வெள்ளிப்பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

(தகவல்கள் : சுப்ரமணியன், புதிய தலைமுறை செய்தியாளர், சென்னை)