செய்தியாளர்: சந்தான குமார்
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவுகள் 274-288ல் தொழில்வரி நிர்ணயம் செய்யவும் மற்றும் வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஓவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதங்களில் திருத்தி அமைக்கலாம் எனவும் அத்தகைய திருத்தம் 25 சதவீதத்துக்கும் குறைவில்லாத வகையிலும் 35 சதவீதத்துக்கும் மிகாமலும் இருக்க வேண்டும்,தொழில் வரிவிகிதம் 2500 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரி உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள அட்டவணை தொகையில் 35 சதவீதம் தொழில்வரி உயர்த்துவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆறுமாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை,
21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும்,
30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 430 ரூபாயாகவும்,
45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நபர்களுக்கு 690 ரூபாயாக இருந்த வரி 930 ரூபாயாகவும்
உயர்த்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வரியை 6 மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். மேலும் தொழில் வரி விகிதத்தை திருத்துவது குறித்து மாநகராட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்ய அரசுக்கு முன்மொழிவினை அனுப்பவும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தொழில் வரிச் சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. தொழில் வரி செலுத்துவோரின் வகைப்பாடு பின்வருமாறு... தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் ஆகியோர்.
சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில் வரியினை பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்திட வேண்டும்.
வருவாய் ஈட்டுவோர் வருவாய் விவரங்களை படிவம்-2ல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். இவ்விவரங்களை பதிந்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியால் அவர்களுக்குத் தனியே தொழில் வரியினை செலுத்தும் வசதிக்காக தனியே எண் ஒன்று வழங்கப்படும். இதற்கு முன்னர் 2008 ஆண்டும், 2018 ஆண்டு தொழில் வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.