செய்தியாளர்: ராஜ்குமார்
சென்னை மாநகராட்சி 2022-23ஆம் நிதியாண்டில் சொத்து வரியை 50 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தியது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில், மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு திமுக கூட்டணியை சேர்ந்த இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் மயானங்களுக்கு அனுமதி வழங்குவது, குப்பைகளை கொட்டுவதற்கான அபராதத்தை உயர்த்துவது போன்ற தீர்மானங்களுகும் எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல் அதிமுகவும், சொத்து வரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மீது பழிபோட்டு, தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்துவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. சொத்து வரி உயர்வுக்கு மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்படும் என, துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடடையே சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ’வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை, மக்கள் மீது திமுக அரசு சுமத்திக்கொண்டிருக்கிறது. திமுகவிற்கு வாக்களித்த பாவத்திற்காக, இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரில் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும், தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்து வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளே சொத்து வரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், வரியை உயர்த்தும் நடவடிக்கையில் இருந்து தமிழ்நாடு அரசு பின் வாங்குமா?.. என கேள்வி எழுந்துள்ளது.