கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னிடம் மாநகராட்சி அதிகாரி தவறாக எதுவும் பேசவில்லை என பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தன்னார்வலர்களாக, சென்னை மாநகராட்சி கல்லூரி மாணவ- மாணவிகளை பயன்படுத்தி வருகின்றது. மண்ணடி பகுதி மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் என்பவர் களப்பணியாளராக பணிபுரிந்து வந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக ஆடியோ ஒன்று வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து கமலக்கண்ணனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் உயர்நீதிமன்ற அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கமலக்கண்ணன் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த கல்லூரி மாணவி தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "கமலக்கண்ணன் குடும்ப சூழ்நிலையை அறிந்து மேல்படிப்பிற்காக தனக்கு உதவி செய்தார். எதிர்கால ஆலோசனை குறித்தும் தன்னிடம் நேரிலும் செல்போனிலும் பகிர்ந்து வருவார். ஒரு போதும் தவறாக எண்ணத்தில் தன்னிடம் கமலகண்ணன் பழகியதில்லை.
இதேபோல் எதிர்கால திருமண வாழ்க்கை குறித்து கமலகண்ணன் தன்னிடம் பேசிய ஆடியோவை சமூக விரோதிகள் சிலர் திருடி சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். கமலகண்ணன் ஆபாசமாக பேசுவதாக மாநகராட்சி மற்றும் காவல்துறையில் நான் எந்த புகாரும் அளிக்கவில்லை. இதுமட்டுமில்லாமல் கமலகண்ணனை பழிவாங்க சமூக விரோதிகள் சிலர் தன்னை பகடைகாயாய் பயன்படுத்தி வருவது தெரியவருகிறது.
கமலகண்ணன் மீது போட்ட பொய் வழக்கை ரத்து செய்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கமலகண்ணன் மீது எந்த தவறும் இல்லை என மனு அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.