தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமாக ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம் ’என அறிவித்தது.
தேர்தலில் வென்ற பிறகு இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என அனைவரும் காத்திருந்த நிலையில் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் செயல்படுத்தப்படும் என அண்மையில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தகுதிகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது.
அதன்படி 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன் பிறந்த 21 வயது நிரம்பியவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வருகிற 20-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட இருக்கிறது என அப்போது சொல்லப்பட்டது.
மேலும் அரசு தரப்பில்,
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்கப்படும். டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக தொடங்கும்
* பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெற நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. நியாய விலை கடைப்பகுதியில் நடக்கும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும்
* விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை
* விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் முகாம் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பின்னர், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும்.
என்றும் சொல்லப்பட்டன
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, காவல் ஆணையாளர் சந்தீப் ரத்தோர் மற்றும் மாநகராட்சி கூடுதல் மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றனர். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களும் இணைய வழியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தை இரண்டு கட்டமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். நாளை முதல் விண்ணப்பங்களை வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்கவும், டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கின் அறிக்கை (bank statement) ஆகியவை வேண்டும். வங்கிக் கணக்கு இல்லை என்றாலும் கூட்டுறவு வங்கியோ அல்லது மற்ற வங்கிகளின் மூலமாகவோ அதிகாரிகள் வங்கிக் கணக்கை திறந்து கொடுப்பார்கள்.
இந்த பணிகளுக்கு உதவியாக காவல்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் இருப்பர். அதேபோல் நியாய விலை கடைகள் முன்பாக எப்போது, எங்கு டோக்கன் வழங்கப்படும் என்ற தகவல் வெளியிடப்படும்.
இரண்டு கட்டமாக சென்னையில் மொத்தமாக 1,428 நியாய விலை கடைகள் மூலமாக கலைஞர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும். இப்பணியில் 3,400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் (மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பணி) இருப்பார்கள். டோக்கனை வீடுகளுக்கு சென்றே வழங்குவார்கள்.
மக்களிடம் ஆவணங்களை அப்போதே பெற்றுவிடுவார்கள். பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். அனைவருக்கும் விண்ணப்பம் 2 கட்டங்களாக வழங்கப்படும். முகாம்கள் நடத்தும் இடத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்த பயோ மெட்ரிக் உள்ளிட்ட கருவிகள் அனுப்ப பட்டுள்ளன” என்றார்.
இது குறித்து காவல் ஆணையாளர் சந்தீப் ரத்தோர் கூறுகையில், “காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் டோக்கன் தனியாக வழங்க இருப்பதால் பெரும் கூட்டம் இல்லாமல் இருக்கும். காவல்துறை சார்பாக தனியாக அறிக்கை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.