தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுககு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை குறைக்க சில முக்கிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் கால்வாய் அமைத்தல், சிறு பாலங்களுக்கு அடியிலுள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முந்தைய ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், மழையால் அதிகளவில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து நகராட்சி நிர்வாத்துறை பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், பாதிப்புகளை குறைக்கும் வகையில் சில பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறுபாலங்களுக்கு கீழ் படியும் கழிவுகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களுக்கு கீழ் இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் உள்ள கழிவுகளால் பல ஆண்டுகளாக குவிந்துள்ள மேடுகளை அதற்கான இயந்திர்ஙகள் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இணைப்பு இல்லாத இடங்களில் உரிய இணைப்பை ஏற்படுத்தி மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுககு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, புதிய பணிகளை மழைக்காலத்துக்குப் பின்னரே ஒப்புதல் அளித்து தொடங்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது சென்னை மாநகராட்சியால் 16 சுரங்கப்பாதைகள், இதர துறைகளால் சில சுரங்கப்பாதைகள் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கப்பாலங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் துறைகளின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கெனவே உள்ள மோட்டார் பம்புகளின் திறனை விட கூடுதலாக 50 சதவீதம் திறன் கொண்ட பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீரை பாலங்களில் இருந்து வெளியேற்றினால், அது மீண்டும் பாலத்துக்குள் வராமல் தடுக்க, கால்வாய்களில் திருப்பி விடப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மழை பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எம். ரமேஷ்