தமிழ்நாடு

“வீடியோ கால் மூலம் புகார் கொடுப்பதில் பெண்களுக்கு பெரும் பலன்” - சென்னை ஆணையர்

“வீடியோ கால் மூலம் புகார் கொடுப்பதில் பெண்களுக்கு பெரும் பலன்” - சென்னை ஆணையர்

webteam

வீடியோ கால் மூலம் உடனடியாக புகார் அளிப்பதில் பெண்கள் பெரும் பலன் அடைந்துள்ளதாக சென்னை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் சஷாங் சாய் கடந்த மாதம் 18ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பூரண குணமடைந்த அவர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். அவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று சான்றிதழ் வழங்கினார். மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு சஷாங் சாய் வருகை தந்தபோது, பேண்ட் வாத்தியம் முழங்க போலீசார் அவரை கைதட்டி வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில், “சென்னை காவல்துறையில் இன்று வரை 1870 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1468 போலீசார் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 32 பேர் பணிக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை போலீசார் பிளாஸ்மா தானம் செய்ய முன் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

போலீசார் மட்டுமல்ல அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும். மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் கிடங்கில் இருந்து முதற்கட்டமாக 10 கண்டெய்னர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள 27 கண்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட் வேதிபொருளை 2, 3 நாட்களில் அப்புறப்படுத்தப்பட்டு விடும். பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்த வீடியோ கால் மூலம் குறை தீர்ப்பது வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் தங்கள் வீட்டிலிருந்தே படியே வீடியோ கால் மூலம் உடனடியாக புகார்கள் அளித்து வருகின்றனர்” என்றார்.

மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் சஷாங் சாய் பேசுகையில், “சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது போலீஸ் கமிஷனர் உட்பட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பேசி நம்பிக்கையும் ஆதரவும் அளித்து வந்தனர். அவர்கள் அளித்த ஆதரவே விரைவாக குணமடைய முக்கிய காரணம். காவல் துறையினருக்கும், டாக்டர்கள், நர்சுகள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடைமைபட்டுள்ளேன். பயப்படும் அளவிற்கு கொரோனா பெரிய நோய் இல்லை. கவனமாக இருந்தாலே போதும்" என்று கூறினார்.