தமிழ்நாடு

கோலப் போராட்டம் செய்த பெண்ணிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரணை - ஏ.கே.விஸ்வநாதன்

கோலப் போராட்டம் செய்த பெண்ணிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரணை - ஏ.கே.விஸ்வநாதன்

rajakannan

சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக கோலப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு பாகிஸ்தான் உடன் தொடர்பு இருப்பதாக எழுந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்னை பெசண்ட் நகரில் பெண்கள் சிலர் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘நோ - என்ஆர்சி’, ‘நோ - சிஏஏ’ என்ற வாசகத்துடன் அவர்கள் கோலங்களை வரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர். 

கோலம் போட்டதற்காக பெண்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, கோலப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசிய போது, “காயத்ரி கந்தாடை என்பவரின் ஃபேஸ்புக் புரொஃபைல் பக்கத்தில், பைட்ஸ் பார் ஆல் என்ற பாகிஸ்தான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அது தி அசோஷியேஷன் ஆஃப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் (the assosiation of all pakistan citizen journalists) என்ற அமைப்பைச் சார்ந்தது. எந்த அளவிற்கு அவர் பாகிஸ்தான் உடன் தொடர்பில் உள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இவர்களுக்கு இங்குள்ள அறப்போர் இயக்கம், வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் சில அமைப்புகள் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.

கோலம் போடும் போராட்டத்திற்கு அனுமதி கேட்டார்கள். ஆனால், அனுமதி தரவில்லை. இருப்பினும், அவர்கள் கோலம் போடுவதை தடுக்கவில்லை. ஏழு கோலங்களுக்கு மேல் போட்டார்கள். அதில், ஏற்கானவே ஒரு வீட்டின் வாசல் முன்பு போடப்பட்டிருந்த கோலம் முன்பு நோ சிஏஏ என்று எழுதியிருக்கிறார்கள். அதற்காக அவர்களிடம் வீட்டின் உரிமையாளர் பிரச்னை செய்துள்ளார்கள். யாருடைய அனுமதியில் என் வீட்டின் முன்பு இதனை செய்கிறீர்கள் என அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அப்போது, இருதரப்புக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனை அறிந்த பின்னரே, போலீசார் அதில் தலையிட்டுள்ளனர்.

அங்கு சென்ற போலீசார், கோலம் போட்டவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், கோலம் போட்டவர்கள் அதற்கு மறுவிட்டார்கள். பின்னர், காவல்துறையினருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். அதனையடுத்தே, காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். கோலம் போட்டதற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. வீட்டு உரிமையாளரிடம் அனுமதியின்றி, அத்துமீறி கோலம் போட்டதால் பிரச்னை ஏற்பட்டது. அதனால், இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டது. அவ்வளவுதான்” என்றார்.