தமிழ்நாடு

10 கி.மீ தொலைவுக்கு சிசிடிவி கேமராக்கள்.. ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்..!

10 கி.மீ தொலைவுக்கு சிசிடிவி கேமராக்கள்.. ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்..!

webteam

சென்னை நகரப் பகுதிகளில் 60 சதவிகிதம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர காவல் ஆண‌யர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதனால் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதன் அவசியம் குறித்து அடிக்கடி கூறி வருகிறார். 

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து கோயம்மேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையில் சிசிடிவி கேமராக்களை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், குற்றச்செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், போக்குவரத்தை சீர்செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் பயன்படுவதாகக் கூறினார். குற்றவாளிகளை பிடிக்க உதவும் முக்கிய சாதனமாக சிசிடிவி கேமரா இருப்பதாக கூறினார். 

மேலும் கீழ்ப்பாக்கம் முத்துசாமி மேம்பாலத்திலிருந்து கோயம்பேடு மேம்பாலம் வரை பூந்தமல்லி சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு 50 மீட்டர் இடைவெளியில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல் ஆய்வாளர் தனது செல்போன் மூலம் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

கேமரா இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்தையும் ZOOM செய்து பார்க்க முடியும் என்று விழாவில் பங்கேற்ற காவல் அதிகாரி தெரிவித்தார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வீடுகள் மற்றும் தெருக்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை இரண்டு மாதம் வரை சேமித்து வைக்க முடியும் என காவலர்கள் கூறினர்.