சென்னையில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார். இவர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி விடுமுறை என்பதால், அமைந்தகரையில் உள்ள டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பாத இவர், கடையிலேயே தங்கியதாக கூறப்படுகிறது. இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கடையின் உரிமையாளரிடம் விசாரித்தனர்.
நிதிஷ்குமாரின் வாகனம் கடையின் வாசலில் இருந்ததால், மற்றொரு சாவியை வைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது நிதிஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது கையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்திருந்தார். அதில் ஆன்லைன் கேம்கள் மீதான மோகத்தில் தன் சேமிப்பு பணத்தையும், வேலை பார்க்கும் டாட்டு மையத்தின் பணத்தையும் வைத்து விளையாடி தோற்றதாக தெரிவித்திருந்தார். கேஸ்ட்ரோ க்ளப் என்ற ஆன்லைனில் விளையாட்டிலும் மொத்த பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடிதத்தில் தற்கொலை செய்து கொள்வது தவறான முடிவு எனவும், தனது பெற்றோர்கள், நண்பர்கள், டாட்டு மைய உரிமையாளர், காதலி ஆகியோரிடம் மன்னிப்பும் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய அமைந்தகரை காவல் நிலையத்தினர், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.