நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை, தீபக் மற்றும் தீபாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக, அரசின் ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி முந்தைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. முந்தைய அரசின் இந்த நடவடிக்கை செல்லாது என்றும், அதனை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த இல்லத்தை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மூன்று வாரத்திற்குள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.