தமிழ்நாடு

“சைக்கிள் ஓட்ட சென்னை செட் ஆகாது” ஆய்வில் தகவல்

“சைக்கிள் ஓட்ட சென்னை செட் ஆகாது” ஆய்வில் தகவல்

JustinDurai

சென்னை சாலைகளில் மிதிவண்டிகளை ஓட்டுவது சிரமம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் உறுதிக்காக மிதிவண்டிகளை ஓட்டும் பழக்கம் சமீபகாலமாக சென்னையில் அதிகரித்தும் வரும் நிலையில் சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையை உருவாக்கும் நோக்குடன் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் சென்னையில் சைக்கிள் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து மிதிவண்டி ஓட்டும் நபர்களிடம் ஆன்லைன் வாயிலாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

1,986 நபர்கள் கலந்து கொண்டு சென்னையில் சைக்கிள் ஓட்டுவதில் உள்ள சிரமங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக சென்னையில் மிதிவண்டிகள் ஓட்டுவதற்கான தனி வழிப்பாதைகள் இல்லை என்பதும், சாலைகளில் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதுகாப்பான சூழல் இல்லை என்பதும் மிதிவண்டி பிரியர்கள் சொல்லும் முக்கிய குறைகளாக உள்ளன.

உடற்பயிற்சிக்காக மட்டுமின்றி அன்றாடப் பணிகளுக்கு செல்வதற்கும் சிலர் மிதிவண்டிகளையே பயன்படுத்தி வருகின்றனர். மிதிவண்டி செல்லும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளாக உள்ள காமராஜர் சாலை, சுவாமி சிவாநந்தா சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலைகளை தவிர மற்ற இடங்களிலும் மிதிவண்டிகள் செல்ல தனிப்பாதை ஏற்படுத்தி தந்தால் மிதிவண்டி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

சென்னையில் மிதிவண்டிகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும்போதும் மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் சுற்றுசூழல் பாதிப்படைவதும் குறையும் என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.