சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை மாறுவேடத்தில் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க துணை ஆணையர் அரவிந்தன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, வளசரவாக்கம் உதவி ஆணையர் சம்பத், காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.
செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, செயின் பறிப்பு கொள்ளையனை காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, காவல்துறையினர் விசாரித்தனர். அவரிடம் பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த நபர் தான், தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடன் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது, போரூர் அடுத்த கெருகம்பாக்கம் திருவிக நகரை சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பது தெரியவந்தது. அத்துடன் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து அவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் திருடன் வளசரவாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடமிருந்து சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் திருட்டு நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
(தகவல்கள் : நவீன்குமார், புதிய தலைமுறை செய்தியாளர், ஆவடி)