Fire service rescued pt desk
தமிழ்நாடு

சென்னை: கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் மூழ்கிய கார் - வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

பள்ளிகரணை நாராயணபுரம் ஏரி அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏரியில் மூழ்கி உள்ளது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை பள்ளிகரணை ரேடியல் சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. நாராயணபுரம் ஏரி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற அது ஏரியில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த இருவரும் காருடன் நீரில் மூழ்கினர். இதனை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த பள்ளிகரணை காவல்துறையினர் கிரேன் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு காரை கரை சேர்த்தனர்.

Car accident

இதையடுத்து அந்த காரில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுசல் என்பவர் மீட்கப்பட்டார். ஆனால் அவர் அப்போதே தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் இருந்தார். கார் ஓட்டுநர் ராஜசேகர் (35), படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராஜசேகர் தனக்குச் சொந்தமான காரை சிறுசேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வந்ததும், நேற்றிரவு அந்நிறுவன ஊழியர்களை பல்லாவரத்தில் இறக்கி விட்டுவிட்டு, திரும்பி சிறுசேரி சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.