தமிழ்நாடு

திடீர் வேலைநிறுத்தம்...சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை..!

Rasus

சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் ஓடவில்லை.

சென்னை மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென எந்தவித முன் அறிவிப்புமின்றி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக ஊதியம் மாத இறுதிநாளில் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஆனால் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் தொடர்கிறது.

திடீர் ஸ்டிரைக் காரணமாக பேருந்து பயணத்திற்காக காத்திருக்கும் மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவிகள்  மற்றும் இதர பலர் பேருந்து இயக்கப்படாததால் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிற்கு செல்கின்றனர்.

அம்பத்தூர், அண்ணாநகர், பூவிருந்தவல்லி பணிமனைகளிருந்து பேருந்துகளை எடுக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளிலும் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது.