சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சந்தியா என்ற பெண்ணின் உடல் கன்னியாகுமரியில் அடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு அருகே உள்ள ஞாலம் என்ற இடத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது 2வது மகள் சந்தியாவை தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் குடும்பமாக சென்னையில் வாழ்ந்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி சந்தியா உடல் துண்டு துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, உடலின் பாகங்கள் குப்பையில் வீசப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, அவரது கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களுள் ஒன்றானது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சந்தியாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் சந்தியாவின் குழந்தைகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தனர். இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று 2 மாதங்கள் முடிந்திருந்தும், இதுவரை சந்தியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் சந்தியாவின் உடலை நேற்று சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதனால் சென்னையிலிருந்து சந்தியாவின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு இன்று சென்றது. அங்கு ஊர்மக்கள் பலரும் சோகத்துடன் அஞ்சலி செலுத்த, சந்தியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.