தமிழ்நாடு

அதிவேகத்தில் பியானோ வாசித்து உலக அரங்கை அதிரவைத்த சென்னை சிறுவன்!

அதிவேகத்தில் பியானோ வாசித்து உலக அரங்கை அதிரவைத்த சென்னை சிறுவன்!

webteam

அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அதிவேகமாக பியானோ வாசித்த சென்னை சிறுவனை ஏஆர் ரகுமான், அனிருத் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்

பெயரிலேயே நாதஸ்வரம் வைத்திருக்கும் சென்னை சிறுவன் 'லிடியன் நாதஸ்வரம்'. இசைப்புயல் ஏஆர் ரகுமான், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் அந்த சிறுவனை வாழ்த்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அப்படி என்ன செய்துவிட்டார் லிடியன் நாதஸ்வரம்?

அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் ( The World's Best) என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட சிறுவன் லிடியன், தன்னுடைய விரல்களை பியானோவில் விளையாடச் செய்தார். 1900 ம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை வாசித்து அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்தார் லிடியன். விரல்களின் வேகம் இருந்தால் தான் இந்த இசையை வாசிக்க முடியும் என்ற நிலையில் அந்த இசையை சராசரியாக மனிதர்கள் வாசிப்பதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து உலக அரங்கை அதிரச்செய்துள்ளார். 

முதலில் சராசரி வேகத்தில் இசையை வாசித்த லிடியனை அனைவரும் எழுந்து பாராட்ட தன்னால் இதைவிட வேகமாக வாசிக்க முடியும் என்ற சிறுவன், நிமிடத்துக்கு 208 பீட்ஸில் அந்த இசையை வாசித்து அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தார். ஆனால் ஆச்சரியம் முடிவதற்குள்ளேயே தன்னால் சராசரியாக மனிதர்கள் வாசிப்பதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வாசிக்க முடியும் என்று அமைதியாக கூறினார் லிடியன்.

அனைவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்ல, நிமிடத்துக்கு 325 பீட்ஸில் இசையை வாசித்து அரங்கத்தில் இருந்த அனைவரையும் திக்குமுக்காடச் செய்தார் லிடியன். அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்ட, லிடியனின் தந்தை வர்ஷன் கண்கலங்கி நெகிழ்ந்துபோனார்.

(லிடியனின் தந்தை வர்ஷன்)

லிடியன் விரல்களின் வேகத்தை பார்த்து அசந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன் தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது ட்வீட் செய்து புகழ்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்த இசைப்புயல் ஏஆர் ரகுமானும் லிடியனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். லிடியன் குறித்து பாராட்டு தெரிவித்துள்ள இசையமைப்பாளர் அனிருத், 'அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்' மொமண்ட் என்ற வாசகத்துடன் ஷேர் செய்துள்ளார்.