சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை திருடிய சிறுவனுக்கு போலீசாரே புது செல்போன் வாங்கிக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு திருட்டு சம்பவம் போலீசாரின் செயலால் நெகிழ்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் மணலி சாலையில் லாரி ஓட்டுநர் அழகு முருகன் என்பவரிடம் 3 நபர்கள் செல்போனை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்றனர். செல்போனை பறிகொடுத்தவர் சத்தமிட அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை துரத்திப் பிடித்தனர். பின்னர், அந்த ஆட்டோவில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். செல்போன் திருட முயன்றவர்களில் ஒருவர் சிறுவர்.
இதனையடுத்து செல்போன் பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் ஆன்லைன் படிப்புக்காக செல்போனை திருடியதாக அந்த சிறுவன் தெரிவித்தார். சிறுவனின் பெற்றோர் அன்றாட வருமானத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் என்பதால் புதிய செல்போன் வாங்கிக்கொடுக்க முடியவில்லை.
இதனை அடுத்து சிறுவனை நல்வழிப்படுத்த நினைத்த காவல் ஆய்வாளர் புவனேஷ்வரி, சிறுவனுக்கு புது செல்போனை வாங்கிக் கொடுத்தார். மேலும் சிறுவனது பெற்றோரை வரவழைத்த ஆய்வாளர், அவர்கள் முன்னிலையில் சிறுவனுக்கு போதிய அறிவுரைகளையும் வழங்கி செல்போனையும் பரிசாக அளித்தார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.