சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில், நீச்சல் குளமொன்று இருந்துள்ளது. இதில் இரண்டு வயது சிறுவன் ரித்தீஷ் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கிறார்.
முன்னதாக குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவமனையில் போதுமான வசதி எதுவும் இல்லாததால் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, “அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏதும் இல்லை. முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தினம்தோறும் விபத்துக்கள் நடைபெறுகின்றன.
விபத்தில் காயமடைந்தவர்களை சென்னை ராயப்பேட்டை, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனை ஒன்றை இந்த பகுதியில் கட்டித்தர அரசு முன்வர வேண்டும்” என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே இறந்த குழந்தையின் தாய், “என் குழந்தையை கையில் கொடுங்கள்” எனக்கூறி கதறிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.