தமிழ்நாடு

இன்று தொடங்குகிறது சென்னை புத்தகக் கண்காட்சி!

இன்று தொடங்குகிறது சென்னை புத்தகக் கண்காட்சி!

webteam


வாசிப்போரின் மனம் கவர்ந்த சென்னை புத்தகக்காட்சி இன்று தொடங்குகிறது.

நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று தொடங்கி வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இப்புத்தகக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை ஆறு மணிக்கு தொடங்கி வைக்கின்றார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், நடைபெறும் புத்தகக் காட்சிக்கென சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

விழாவில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவில், சிறந்த பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், சிறந்த அறிவியல் நூல் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறவிருக்கும் புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை அல்லாத நாட்களில் மதியம் மூன்று மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

புத்தகக் காட்சியின் சிறப்பம்சமாக 'கீழடி - ஈரடி' என்ற தலைப்பில் தொல்லியல் துறை சார்பில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை 20 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கண்காட்சி அமைப்பாளர்கள் கூறி உள்ளனர். சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

  • நுழைவுக் கட்டணம் ரூ.10.
  • இணையதளம் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெறலாம்.
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. அவர்களுக்கான அனுமதிச்சீட்டு கல்வி நிறுவனங்களிடம் கொடுக்கப்படும்.
  • மெட்ரோ ரயில் மூலம் கண்காட்சிக்கு வந்தால், பயண அட்டையை காண்பித்து இலவச அனுமதியை பெறலாம்