செய்தியாளர்: M.ரமேஷ்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் காரணமாக, சென்னை கோட்டை ரயில் நிலையம் மற்றும் பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இருப்பினும், ஆறு மாதம் தாமதத்திற்கு பிறகு இன்று முதல் (29.10.2024) மீண்டும் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை செல்பவர்கள் கடந்த ஓராண்டுக்கு மேல் சிந்தாதிரிப்பேட்டை வரை சென்று, அதன் பிறகு மாற்று ரயில் பிடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அத்துடன் குறைவான எண்ணிக்கையிலேயே சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேளச்சேரி இடையே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர்.
இந்நிலையில், கடற்கரை - வேளச்சேரி இடையே இன்று முதல் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், கூடுதல் ரயில்கள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதேபோல வேளச்சேரி பரங்கிமலை இடையே ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு இன்னமும் சேவை தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.