காயத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் PT web
தமிழ்நாடு

காலில் தீக்காயத்துடன் சிறுவன்.. விடைதேடி காரில் சுற்றிய அரசு அதிகாரிகள்; க்ளைமேக்ஸில் பகீர் தகவல்

PT WEB

சென்னையைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்குத் திருமணமாகி 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் பரமேஸ்வரி தனது குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பரமேஸ்வரி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வருகிறார். பரமேஸ்வரியின் மகன் வீட்டில் அதிகமாகச் சேட்டை செய்து வந்ததால் 2வது கணவர் சிறுவனை நம் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம் வேறு யாரிடமாவது ஒப்படைத்து விடு எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சிறுவனை வேலூர் அருகே உள்ள கருகம்புத்துார் பகுதியில் உள்ள முதல் கணவரான முருகனின் தங்கை வீட்டில் ஒப்படைக்கப்படைத்து விட்டுச் சென்றுள்ளார் பரமேஸ்வரி. சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி கொணவட்டம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே காலில் தீக்காயத்துடன் சிறுவன் சுற்றித் திரிந்துள்ளான். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதனைதொடந்து சிறுவன் தனக்குத் தெரிந்த ஊர்களின் பெயர்களை எல்லாம் தெரிவித்துள்ளான். பின்னர் சிறுவனை அதிகாரிகள் காரில் அழைத்துக் கொண்டு சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாவட்டம் முழுவதும் சிறுவனின் வீட்டைத் தேடி அதிகாரிகள் அலைந்து திரிந்துள்ளனர்.

கருகம்புத்துார் அருகே கார் சென்ற போது "இங்கே தான்.. இங்கே தான்" எனச் சிறுவன் கூச்சலிட்டுள்ளான். உடனே அதிகாரிகள் அந்த பகுதியில் காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது சிறுவன் மஞ்சு வீட்டில் வளர்ந்த குழந்தை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், சிறுவன் அதிக சேட்டை செய்ததால் சிறுவனுக்குச் சூடு போட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் மஞ்சு ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தியதில் குழந்தையை வளர்க்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சிறுவனின் தாய் பரமேஸ்வரியும் குழந்தையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதால் நீதிமன்ற உத்தரவின்படி சிறுவன் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

இச்சம்பவம் வழக்குப் பதிவு செய்த போலீசார் மஞ்சுவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.