போகி நாளன்று அதிகாலையில் தரையிறங்கும் விமானங்களின் நேரங்களை மாற்றியமைக்க தயாராக இருக்குமாறு விமான நிறுவனங்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். பழையனக் கழிதலும், புதியனப் புகுதலும் என்பதை வலியுறுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படும். இந்தத் தினத்தில் வீட்டிலுள்ள பழைய உபயோகமற்ற பொருட்களை வாசலில் போட்டு கொளுத்துவது வழக்கம். எனவே போகி தினத்தின் அதிகாலையில் பெரும் புகை மூட்டம் காணப்படும். ஏற்கெனவே சென்னை உள்பட தமிகத்தில் பல இடங்களில் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிருடன் பனி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை கொளுத்துவதால் அதிக அளவில் புகை மூட்டம் காணப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் போகி நாளன்று அதிகாலையில் தரையிறங்கும் விமானங்களின் நேரங்களை மாற்றியமைக்க தயாராக இருக்குமாறு விமான நிறுவனங்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இது சம்பந்தமாக விமான பயணிகளுக்கும் கூட முன்கூட்டியே தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் போகிப் பண்டிகையன்று கிட்டத்தட்ட 16 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, ஹைதரபாத் மற்றும் கோவைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் 42 விமானங்கள் நேர தாமதமாக தரையிறங்கின. இதனிடையே சென்னை விமான நிலைய அதிகாரிகள் சார்பில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகர போலீஸ் ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் விமான நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில், பழையவற்றை கொளுத்தி நெருப்பை மூட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.