சென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் அகாடமி நிறுவனத்தில் வெளியிட்டிருந்த விளம்பரத்தை சமூக வலைத்தளத்தில் பார்த்துள்ளார். அங்கு 2499 ரூபாய் பணம் கட்டி ஒரு நாள் பயிற்சி வகுப்புக்குச் சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் சுஷ்மிதாவுக்கு இரண்டு காதுகளிலும் கம்மல் போட்ட இடத்தில் ஓட்டைகள் இருந்துள்ளது. அந்த ஓட்டையை அடைப்பதற்கான சிகிச்சை முறை என்று பியூட்டி பார்லரில் கூறியுள்ளனர். பின்னர் சுஷ்மிதாவிடம் ஒரு [XXX] கீரிமை பயன்படுத்தி சிகிச்சை அளித்தால் காதில் உள்ள ஓட்டை மறைந்து விடும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய சுஷ்மிதாவும் பியூட்டி பார்லரில் கூறியது போலச் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஓரிரு நாட்களிலேயே இரண்டு காதுகளிலும் காயங்கள் பெரிதாக ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பியூட்டி பார்லர் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் இதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் காதின் ஒரு பகுதி முழுமையாக அழுகி அறுந்து விழுந்துள்ளது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது ஏற்கனவே கொடுக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாகத்தான் காது அழுகிப்போனதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, பியூட்டி அகடாமி நிறுவனத்திடம் உரிமையாளரிடம் சுஷ்மிதா கேட்டுள்ளார். அதற்கு "இனிமேல் இதைப் பத்தி பேசக்கூடாது" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திரு.வி.க நகர் காவல் நிலையத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பியூட்டி அகடாமி உரிமையாளரிடம் கேட்ட போது, "நாங்கள் முறைப்படி அவருக்குச் சிகிச்சை அளித்தோம். சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு காதில் தண்ணீரில் பயன்படுத்தக்கூடாது. ஆனால் அதை மீறி சுஷ்மிதா தண்ணீர் பயன்படுத்தியதன் காரணமாகத் தான் அவர் காது அழுகிய நிலைக்குப் போய்விட்டது” என்றார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.