தமிழ்நாடு

சென்னை: கொசுவை விரட்ட போட்ட புகை மூட்டம்: மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு

சென்னை: கொசுவை விரட்ட போட்ட புகை மூட்டம்: மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு

kaleelrahman

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மலில் கொசுவிற்கு போட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பம்மல் திருவள்ளுவர் தெரு பொன்னிநகரில் வசித்துவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தங்களது வீட்டில் உறங்கச் செல்வதற்கு முன்பு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததால் கொசுவை விரட்ட அடுப்புக்கரியை ஒரு தட்டில் வைத்து அதில் புகை மூட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல் அவர்களது சமையல் அறையில் எண்ணெய்யை வைத்து அதையும் கொதிக்கவைத்ததோடு, ஏசியையும் போட்டிருந்த காரணத்தினால் புகையை சுவாதித்த 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையில் வீட்டில் இருந்த 4 பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத காரணத்தால் வீட்டின் மேல்பகுதியில் குடியிருக்கும் பெண், கீழ் வீட்டில் வசிப்பவரின் மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த அவர்களது மகன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 4 பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே 4 பேரையும் பரிசோதித்த மருத்துவர், 4 பேரில் புஷ்பலெட்சுமி என்பவர் மட்டும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்ற 3 பேரை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில். உயிரிழந்தவர் புஷ்பலெட்சுமி என்பதும், சொக்கலிங்கம், மல்லிகா, விஷால் ஆகியோர் சிகிச்சையில் இருப்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சங்கர் நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.