சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மூத்த மகன் பவித்தரன் (21). வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர், மளிகைப் பொருள் ஆன்லைன் டெலிவரி ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 11 ஆம் தேதி கொரட்டூர் ஏவிஎஸ் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிஷா என்ற பெண், ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது பவித்திரன் அந்தப் பெண் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் முகவரி தேடி அலைந்துள்ளார். பின்னர் நிஷாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தற்போது நீ எங்கள் வீட்டின் பின்புறத்தில் இருக்கிறாய், முன்பக்கம் வந்து பார்சலை கொடுத்து விட்டுச் செல்’ என தெரிவித்துள்ளார். அதற்கு பவித்திரன், ‘நீங்கள் அனுப்பிய லோக்கேஷனில்தான் நிற்கிறேன். இங்கு வந்து உணவு பார்சலை வாங்கிக் கொள்ளுங்கள்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நிஷா, பவித்திரனை தகாத வார்த்தையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான பவித்திரன், கடந்த 13 ஆம் தேதி நிஷாவின் வீட்டிற்கு சென்று கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி துபாயில் இருந்து வந்த தன் கணவரிடம் நிஷா நடந்தவற்றை கூறி, அவர் உதவியோடு இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் பவித்திரனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான பவித்திரன் நேற்று இரவு வீட்டில் விபரீத முடிவெடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து சென்று பவித்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பவித்திரன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கடிதத்தில் நிஷாவின் செயல்தான் தன் முடிவுக்கு காரணம் என குறிப்பிட்டு வைத்துள்ளார் அந்த இளைஞர். இதையடுத்து, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெண்ணிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.