செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு படித்து ராமாபுரத்திலேயே PG ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு பெண் தோழிகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பப்புக்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவின்றி இருந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள 'கிங்ஸ் பார்க்' ஹோட்டலில் உள்ள HOB பப் கடந்த இரண்டு வருடங்களாக KR Events என்ற நிறுவனம் நடத்தி வருவதும், பப்பிற்கு வரும் நபர்களுக்கு நுழைவு கட்டணமாக தலா 1000 நிர்ணயிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.
மேலும், நேற்று இரவு 3 பெண் தோழிகளுடன் வந்த முகமது சுகைல் உணவு சாப்பிட்டுவிட்டு நடனமாடியதும் அப்போது மயக்கம் வருவதாக தனது தோழிகளிடம் கூறிவிட்டு ஓரமாக சென்றதும் பின் மயக்கமடைந்த பின் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து உயிரிழந்த நபர் மது குடித்துள்ளாரா? மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தாரா? அல்லது உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்பது குறித்து உடற்கூராய்வு செய்யப்பட்டு அறிக்கை வந்த பின்பு தெரிய வரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் செல்வநாயகர்த்தினம் பப் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.