சென்னை மந்தைவெளி பகுதியில் காணப்பட்ட மூன்று அடி நீளமுள்ள அரியவகை மண்ணுளி பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
சென்னை மந்தைவெளி பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் பகுதியில் மர பொந்து அருகே மண்ணுளி பாம்பு இருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணுச்சாமி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணுளி பாம்பை மீட்டனர். சுமார் 3 அடி நீளமுள்ள இந்த பாம்பு மண்ணுளி பாம்பு வகைகளில் அரிய வகையான சிவப்பு மண்ணுளி பாம்பு என தெரிவித்துள்ளனர்.
இந்த அரியவகை பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படும் மண்ணுளி பாம்பு பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. மண்ணுளி பாம்புகளில் இந்த சிவப்பு நிற மண்ணுளி பாம்பு அரிய வகையை சேர்ந்தது. சர்வதேச சந்தைகளில் இதற்கு அதிக மவுசு இருக்கிறது.
குறிப்பாக சீனா மற்றும் மலேசியா நாட்டில் இந்த பாம்புகள் கடத்தப்பட்டு பிளாக் மேஜிக் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பாம்பு கடத்தல் கும்பலால் இங்கு கொண்டு பதுக்கி வைக்கப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர். இந்த அரியவகை பாம்புகளை வனவிலங்கள் பாதுகாப்புச் சட்ட பிரிவு 4-ன் கீழ் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதை கடத்தினால் 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.