செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், ஆலிவ் பீச் சாலையில் தொழிலதிபர் பிரஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களாக படப்பையில் ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவர், கடந்த 3 வருடங்களாக இந்த வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருக்கிறார்.
இந்நிலையில், இவர், கடந்த 23 ஆம் தேதி தனது குடும்பத்துடன் ஜெர்மனிக்கு சென்று விட்டார். வீட்டில் காவலாளி மற்றும் சமையல்கார பெண் மட்டும் இருந்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி காலை 7 மணியளவில் வீட்டின் பின்பக்கம் சென்று மின் விளக்கை அணைக்க காவலாளி சென்றுள்ளார். அப்போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது முதல் மாடியில் உள்ள படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணப்பெட்டி மற்றும் லாக்கரை யாரோ உடைத்திருப்பதும் அதில் இருந்த பணம் முழுவதும் கொள்ளைபோனதும் தெரியவந்தது. அதேபோல் மற்றொரு லாக்கரை உடைத்து அதிலிருந்த நகைகளும் கொள்ளை போயிருந்தன. இதையடுத்து காவலாளி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த நீலாங்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். பல லட்ச ரூபாய் பணம், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில், 4 பேர் வந்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில், பெங்களூரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 4 பேரை கைது செய்த போலீசார், ரூ.17 லட்சம் பணம், 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து இரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தொழிலதிபர் வீட்டின் தற்காலிக ஓட்டுனராக வேலை பார்த்த பிரகாஷ் என்பவர் வீட்டில் நகை பணம் இருப்பதை அறிந்து நேபாளத்தில் இருந்து ஆட்களை வரவழைத்து உரிமையாளர் இல்லாத போது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நேபாளத்தை சேர்ந்த லலித், ஜோசி, பிரகாஷ், சவுது என்பது தெரியவந்தது. இன்னும் இரண்டு பேர் பிடிபடாத நிலையில் மேலும் நகைகள், பணம் இருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.