சென்னையில் காற்றின் தரம் குறைந்திருப்பதாக தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் காற்று மாசு குறித்து தூய்மையான காற்றுக்கான மருத்துவர் அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மருத்துவர் கண்ணன் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் காற்று மாசு குறித்த பல்வேறு விஷயங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு சென்னையில் 15 இடங்களில் காற்று மாசினை அளவிட்ட போது வட சென்னையை போல் தென் சென்னையிலும் காற்றில் மாசு கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களை போல் அல்லாமல் சென்னையில் இப்போதே இதனை நாம் கணக்கிட்டு உடனே கட்டுப்படுத்த வேண்டும். இப்போதே செய்தால் அது முடியும். காற்று மாசால் வடசென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களால் கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் காற்றின் சுழற்சி காரணமாக வடசென்னையில் தொழிற் நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதிலிருந்து வெளியிடும் நச்சுப் புகையானது அனைத்து இடங்களுக்கும் பரவலாம். மேற்கொண்டு போயஸ்கார்டன், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மாசு உள்ளது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம்.
வாகனங்களின் அதிகரிப்பு, தொழிற்சாலை வெளியிடும் புகை போன்றவை காற்றை மாசுபடச் செய்கிறது. இதற்கு அரசு மட்டுமே முயன்றால் போதாது. பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைக்க வேண்டும். தங்களின் வாகனங்களை உரிய முறையில் சோதனை செய்து அதிலிருந்து வெளியேறும் புகையின் அளவை சரி செய்ய வேண்டும். அதன்மூலம் நிச்சயம் காற்று மாசினை கட்டுப்படுத்தலாம். எங்களது ஆய்வின் மூலம் காற்று மாசினால் 14வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 65வயதிற்கு மேல் உள்ளவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கண்டுபிடித்துள்ளோம் என்று இருவரும் தெரிவித்தனர்.