தமிழ்நாடு

சென்னை: பிரான்ஸ் உதவியுடன் நவீனமாக மாற்றப்படும் மாநகராட்சிப் பள்ளிகள்

webteam

சென்னை மாநகராட்சியில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் 46 பள்ளிகளில் நவீன வசதியுடன் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிகள் நவீனமயமாகின்றன.

சென்னை மாநகராட்சியின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இருக்கின்றன. தற்போது இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்ற தனியார் பங்களிப்புடன் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது.

சித்திரிக்கப்பட்ட படம் 

பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் 46 பள்ளிகள் ரூ. 95.25 கோடி மதிப்பில் நவீனமாக மாற்றப்படவுள்ளன. அதாவது, மத்திய அரசின் நிலைத்த, நீடித்த மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பள்ளிகளுக்கான சவால் என்ற திட்டத்தின்கீழ் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் சீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் சீரமைக்கும் பணிக்கு பிரான்ஸ் மேம்பாட்டு முகமை ரூ. 76. 20 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மீதமுள்ள தொகை சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் மத்திய மாநில அரசுகள் இணைந்து வழங்கவுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் 46 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் வசதியுடன் கூடிய நவீன வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்களுக்கான உபகரணங்கள், இயற்கைச் சூழலுடன் கூடிய பள்ளி வளாகங்கள், நவீன ஆய்வுக்கூடங்கள் ஆகிய நவீன வசதிகள் ஏற்படவுள்ளன.