கொரோனா சிகிச்சை மையத்தில் உணவு தரம் குறித்து ஆய்வுசெய்த அமைச்சர், தோசை சுட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவிவரும் நிலையில் தமிழக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இக்கடுமையான சூழலை மேற்கொள்ள பல்வேறு துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.
அப்போது திடீரென தோசை சுட்ட அமைச்சர், அதன் தரத்தையும் ஆய்வு செய்தார். பின்னர், தோசை எப்படி சுட வேண்டும் அதை எப்படி போட வேண்டும் என்று சமையல் மாஸ்டருக்கு சொல்லிக் கொடுத்த அமைச்சர், சாம்பார் வைப்பது பற்றியும் சமையல்காரரிடம் கூறினார். பின்பு உணவு தரமாக உள்ளதாக வருவாய் துறையினரை பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.