தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா வருகிற 10ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். இந்நிலையில், இந்தப் பயணத்தின் போது தமிழக பாரதிய ஜனதா தலைவர் மாற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகளே உள்ள நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி அல்லாத மாநிலங்கள் மீது அமித்ஷா கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் கூட ஆட்சியை பாரதிய ஜனதா பிடித்துள்ள நிலையில், தென் மாநிலங்களின் மீது அமித் ஷா தனது கவனத்தைத் திருப்பியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழிசை பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் கட்சியின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லை என பாரதிய ஜனதா தலைமை கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைவருக்கான பெயர்களில் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் மட்டுமின்றி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசகுமார் ஆகியோரும் உள்ளதாக கூறப்படுகிறது.