செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடிகள் இன்று மீண்டும் இயங்க அனுமதி பெறப்பட்டுள்ளது
கொரோனா தாக்கத்தால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற மே-31 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தி பிரதமர் அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி மையத்தில் ஏப்ரல் 20 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டண வசூல் தொடங்கப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யவும், இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி, வெங்கம்பாக்கம் மற்றும் பூஞ்சேரியில் உள்ள 2 இடங்களிலும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யவும் அம்மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தடை விதித்திருந்தார்.
வைரஸ் தாக்கத்தின் காரணமாக சென்னையிலிருந்து அதிக மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்ல சுங்கச்சாவடிகளை கடக்கும்போது அதிக அளவு வாகனங்கள் தேங்கி நிற்கும் என்பதால் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டு சுங்கச்சாவடி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட காரணத்தினால் கடந்த ஜனவரி 26-ம் தேதி முதல் தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனரகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக இன்று முதல் செங்கல்பட்டு சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடியில் அனைத்து கண்ணாடிகளும் புதுப்பிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள், மின் விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் ஆகியவை பழுது பார்க்கப்பட்டுள்ளன. கணினி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களும் சரிபார்க்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது