‘நாங்கள் தாடி வைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ என செங்கல்பட்டு அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதி, அதனை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். இதுதொடர்பான ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தின் பதிவும், இணையத்தில் பேசுபொருளானது.
காஷ்மீரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு தாடியை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் நிர்பந்திப்பதாக அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், தங்கள் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாணவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து நம்மிடையே பேசிய செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாஸ்கர்...
“தாடி வைத்துக் கொள்வதால் எந்தப் பிரச்னையும் இல்ல. அது, அவங்களோட மதம் தொடர்பான விஷயங்களை அவங்க கடைபிடிக்கிறாங்க. இதற்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகமோ, மருத்துவத் துறையோ எதிர்ப்பு கிடையாது.
அதேநேரம் தேர்வு நேரத்தில் சில அறிவுரைகள் வழங்கப்படும். அப்படி பொதுவாக அவங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைப்படி சில விஷயங்களை கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அவ்வளவுதான்” என்றார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவத் துறையில் படிக்கும் மாணவர்கள் எந்த கலாசாரத்தை, எந்த மதத்தை பின்பற்றி இருந்தாலும் அதனை அப்படியே பின்பற்றலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது....
“எல்லா மாநிலத்தில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு மாணவர்கள் படிக்க வருவார்கள். அவர்களுடைய உடை, உணவு, கலாச்சாரம், பண்பாடு மற்றும் மதரீதியிலான எந்த விஷயத்திலும் நாம் தலையிடக் கூடாது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அது மாதிரியே இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதில் எதிலும் தலையிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறோம்.
இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில்கூட மாணவர்களின் செக்கரட்டரியை அழைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர், ‘நாங்கள் அந்த நோக்கத்தில் சொல்லவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து மாணவர்கள் அரசுக்கு நன்றி சொல்லி நேற்றே பதிவு போட்டிருக்காங்க” என்றார்.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் அமைச்சர்.