செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு உறுப்பினர் அன்பரசு. அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனான இவர், நேற்றிரவு கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற நவீன்குமார் என்பவரின் படத்திறப்பு விழாவிற்கு அவரது நண்பர்கள் 7 பேருடன் காரில் சென்றுள்ளார்.
இந்நிலையில், அன்பரசு அங்குள்ள சுடுகாட்டு வாசலில் அமர்ந்து தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அன்பரசு எடுத்து வந்த கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில், காரின் கண்ணாடி சேதமடைந்துள்ளது. இதையடுத்து மது அருந்தி கொண்டிருந்த 7 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
அப்போது ரவுடி கும்பல் மறைத்து வைத்திருந்த வீச்சருவாளால் அன்பரசை ஓட ஓட சரமரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காயார் போலீசார், அன்பரசை கொலை செய்தது யார்? எதற்காக அவரை கொலை செய்தார்கள் என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ரவுடி கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அன்பரசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கேளம்பாக்கம் வண்டலூர் பிரதான சாலையில் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.