ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35), லாரி டிரைவரான இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது 6 வயது மகன் பிரதீஷை அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள ஊராட்சி குழாயில் மணிகண்டன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் பிரதீஷ் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். தண்ணீர் பிடித்து முடித்த பிறகு விளையாடிக் கொண்டிருந்த மகனை பார்த்தபோது மகன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து மணிகண்டன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் மகனை காணவில்லை. இதனால், தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த குழாய் அருகே மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கை பார்த்துள்ளார். அப்போது அதில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் இருந்த தனது மகனை அக்கம் பக்கத்தில் உதவியுடன் மீட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த பாலூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையுடன் வீட்டிற்கு குடிநீர் பிடிப்பதற்காக சென்ற ஆறு வயது சிறுவன் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சாஸ்திரம் பாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தின் காரணமாக ஊராட்சி மன்ற செயலர் உள்ளிட்ட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.