தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை

webteam

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்து வருவதாகவும், அதற்கு தடைவிதிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பேச்சுரிமை என்பது இருந்தாலும் யார் குறித்தும் அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே என எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சவுக்கு சங்கர் கூறிவருவதாகவும் மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு மானநஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்