மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவு தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய நடிகர் சார்லி, “அண்ணனை நான் முதன்முதலாக சொல்வதெல்லாம் உண்மை எனும் திரைப்படத்தில் தான் சந்தித்தேன். நிறைய படங்கள் அவருடன் நடித்துள்ளேன், அவரது ரசிகர்கள் அவரை கேப்டன் என அழைப்பார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரது மனித நேயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இன்று அண்ணன் இல்லை எனும் போது தலையில் இடி விழுந்ததுபோல் இந்த செய்தி விழுந்தது.
அத்தனை பேரையும் மனிதநேயம் எனும் ஒரு வார்த்தையில் கட்டிப்போட்ட மாமனிதர். கடையேழு வள்ளல்கள் என சொல்லுவார்கள். அதில் கடைசி வள்ளல் இன்று தூங்கிவிட்டார். இவருக்கு பதிலாக அந்த தலைவர் இருக்கிறார் இந்த தலைவர் இருக்கிறார் என யாருக்கு வேண்டுமானாலும் மாற்று சொல்லலாம். ஆனால் மாற்று சொல்லவே முடியாத ஒரே ஒருவர் இன்று இல்லை எனும் செய்தி கேள்விபட்டதும் வார்த்தைகள் வரவில்லை.
எப்போது உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அடுத்த வினாடி நாம் உதவி செய்துவிட வேண்டும். இல்லையென்றால் மனது மாறுவதற்குள் உதவி செய்துவிட வேண்டும் என சொல்லுவார். கார்கில் யுத்தத்தின் போது அரசாங்கம், அரசாங்கம் பண உதவி செய்பவர்களுக்கு வரிவிலக்கு என அறிவித்தது. “கார்கில் யுத்தத்துல நம்மாளுக எல்லாரும் அடிபடுறாங்கடா..” எடுத்தவுடன் வரிவிலக்கு இருக்கிறதா என்றெல்லாம் யோசிக்காமல் முதலில் கொடுத்தது விஜயகாந்த். எல்லோரையும் நேசிப்பவர். எனக்கு ஒரு வருத்தம் தான். அவ்ளோ சத்தமா பாசமா சார்லின்னு யாரு கூப்புடுவா? சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.