நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்  pt desk
தமிழ்நாடு

'பட்டினப்பிரவேசம்'-ல் தொடங்கிய நடிப்பு பயணம்.. 400+ படங்கள்.. மறைந்தார் நடிகர் டெல்லி கணேஷ்!

தமிழ் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்

PT WEB

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள டெல்லி கணேஷ் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குணச்சித்திர நடிகராவும், காமெடி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம்வந்த டெல்லி கணேஷ், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Rajinikanth Delhi Ganesh

மறைந்த டெல்லி கணேஷ்-க்கு தங்கம் என்ற மனைவியும், பிச்சுலட்சுமி, சாரதா ஆகிய இரு மகள்களும், மகாதேவன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், 1964 முதல் 1974ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படையில் பணியாற்றியுள்ளார் இதையடுத்து சினிமா மற்றும் நடிப்பு மீது ஆர்வம் கொண்ட இவர், 1976ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் 'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

டெல்லி தட்சிண பாரத நாடக சபாவில் நடிகராக இருந்த இவர், டெல்லி கணேஷ் என பெயர் பெற்றார். 1994ல் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ள இவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பெற்றார். நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

Kamal Delhi Ganesh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஸ்ரீ ராகவேந்திரர் என்ற படத்தில் நடித்ததோடு தனது நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 2024ல் திரைக்கு வந்த ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ள இவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு (10-11-2024) காலமானார். அவரது மறைவு சினிமா நடிகர் நடிகைகளையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.