தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம்: கேட்பாரற்று குவிந்து கிடக்கும் பக்தர்களின் காலணிகள்!

அத்திவரதர் தரிசனம்: கேட்பாரற்று குவிந்து கிடக்கும் பக்தர்களின் காலணிகள்!

webteam

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் காலணிகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. 

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்லும் நிலையில், அவர்கள் விட்டுச் செல்லும் காலணிகளை அப்புறப்படுத்துவது மாவட்ட நிர்வாகத்தினருக்கு மிகப்பெரும் சவாலாகியுள்ளது. பொது தரிசனத்தில் கிழக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுப்பப்படும் பக்தர்கள், வசந்த மண்டபத்தில் அத்திவரதரை தரிசித்து விட்டு, மேற்கு கோபுரம் வழியாக வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், கிழக்கு கோபுரத்திற்கு வெளியே பக்தர்கள் கழற்றி விடும் காலணிகள் அங்கேயே குவிந்துவிடுகிறது. பல மணி நேரம் காத்திருந்து கோயிலுக்குள் செல்வதால் ஏற்படும் அசதி, கூட்ட நெரிசலை கடந்து மேற்கு கோபுரத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிழக்கு கோபுரத்திற்கு செல்ல வேண்டுமா என்ற மலைப்பு போன்றவற்றால் காலணிகளை மீண்டும் பக்தர்கள் எடுத்து செல்வதில்லை.

காலணிகளை எடுத்துச் செல்ல பெரும்பாலான பக்தர்கள் திரும்பி வருவதில்லை என்பதைப் பயன்படுத்தி சிலர், கோவிலின் முன் அமர்ந்து கொண்டு செருப்புகளை பாதுகாப்பதாகக் கூறி பணம் வசூலிக்கின்றனர். சிறிது நேரம் கழித்து காலணிகளை சாலையில் வீசிவிட்டு, பணத்துடன் காணாமல் போய்விடுகின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 3 லாரிகளில் பக்தர்களின் செருப்பு குவியல்கள் சேகரிக்கப்பட்டு நத்தம்பேட்டை குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. அதனால், அந்த பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், மழைத்தூரல் விழுந்தாலே காலணிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாவதாகவும் மக்கள் கூறுகின்றனர். பக்தர்களும், குடியிருப்பு வாசிகளுக்கும் சிரமமின்றி, கிழக்கு கோபுரத்தில் விடப்படும் காலணிகளை, மேற்கு கோபுரம் அருகே பக்தர்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.