தமிழ்நாடு

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்

webteam

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


பொதுமக்கள் கூட்டமாக வெளியே வருவதை தடுக்கும் வகையில், ரேசன் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த டோக்கன்களில் பொருட்கள் வழங்கும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் அந்த நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டோக்கன் வழங்கும் தேதியை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் எனவும் மே 4 ஆம் தேதியில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடித்து ரேசன் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.