தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்?

webteam

12 ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு இனி ஒரே புத்தகமாக மாற்றி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டங்களில் பல மாற்றங்களை செய்தது. அதனையொட்டி  தமிழகத்தில் தற்போது உள்ள கல்வித்திட்டத்தின் படி 11 வகுப்பு மாணவர்களுக்கு தாவரவியல், விலங்கியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் போன்ற பாடங்களுக்கு இரண்டு பாகங்களாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தது.  

இந்நிலையில் 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் பாடமுறை சிரமத்தை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் சிரமத்தை எதிர்கொள்வதும் தெரிய வந்தது. மேலும் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டம் போலவே 12 ஆம் வகுப்பிற்கும் வந்துவிடுமோ என்று அஞ்சியதாக கூறப்பட்டது. இதனால் மாணவர்கள் மன உளச்சலுக்கு ஆளகின்றனர். 

இந்தச் சுழலில் தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் போன்ற பாடங்களுக்கு இனிமேல் ஒரே புத்தமாக மாற்றி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 12 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை ஒரே பாகமாக மாற்றி அமைக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறித்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் தேர்வுச்  சுமையைக் குறைக்க வேண்டி இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் 11, 12ஆம் வகுப்புகளில்  உள்ள 4 முக்கிய பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.