தமிழ்நாடு

மாற்றமும், ஏமாற்றமும் கலந்த நிதிநிலை அறிக்கை: ஸ்டாலின் விமர்சனம்

மாற்றமும், ஏமாற்றமும் கலந்த நிதிநிலை அறிக்கை: ஸ்டாலின் விமர்சனம்

webteam

மத்திய நிதிநிலை அறிக்கை மாற்றமும், ஏமாற்றமும் கலந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்திருக்கின்றது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்:

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை, நதிநீர் இணைப்பு, மெட்ரோ ரயில் விரிவாக்கம் இவைகளெல்லாம் இந்த மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது என கூறினார்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள் சமர்ப்பித்திருக்கின்ற பட்ஜெட்டில் “பத்து கொள்கைகள்” கொண்ட நிதிநிலை அறிக்கை என்று பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பெருமையோடு அவர் சொல்லியிருக்கின்ற பத்து கொள்கைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய நிலை இல்லை என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என கூறினார்.

மத்திய அரசு வெளியிட்டிருக்கின்ற இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை என்பது வேதனை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிக மகளிரை ஈடுபடுத்துவது, கடந்த வருடத்தை விட 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அதிகம் ஒதுக்கியிருப்பதை வரவேற்பதாகவும், 50 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளை வறுமைக்கோட்டிற்கு மேலே கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட இருப்பது பாராட்டக்கூடியது என்றும் ஸ்டாலின் கூறினார்.

அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் சீர்திருத்தத்தை கொண்டு வரப்போவதாக வந்துள்ள அறிவிப்புபையும் ஸ்டாலின் வரவேற்றார். ஒட்டுமொத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை பொறுத்த வரையில் மாற்றமும், ஏமாற்றமும் கலந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்திருக்கின்றது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.