தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Rasus

தென்மேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ‌மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை, தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்தது. இதனால் சென்னையில் நேற்று விட்டு விட்டு லேசாக மழை பெய்தது. அதேபோல தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ‌மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இதுவரை போதிய அளவில் பெய்யவில்லை. சென்னையிலும் இதுவரை வழக்கமான அளவை விட குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று சென்னை வாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.